முகவுரை

எமது சமயத்தின் முதனூல்கள் வேதங்களும் ஆகமங்களுமாகும். வேதம் பொதுநூல் எனவும், ஆகமம் சிறப்பு நூல் எனவும் கொள்வது சைவ மரபு. வேதங்களை ஏற்றுக்கொண்ட காரணத்தினாலே எமது சைவ சமயம் வைதிக நெறி எனவும் வழங்கும்.

 "வேதநெறி தழைத்தொங்க மிகுசைவத் துறைவிளங்க" என்பது, திருத்தொண்டர் பெரிய புராணத் திருவாக்கு.

 

  (அ) வைதிக நெறி

 

வேதம் என்ற சொல் 'வித்' என்ற வினை அடியிலிருந்து பிறந்தது. 'வித்' என்பதன் பொருள், அறிதல். பரம்பொருளை அறிவதற்குரிய ஞானத்தை வேதங்கள் அருளவல்லன. இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்பன வடமொழியில் அருளப்பட்ட நான்கு வேதங்கள். இவற்றின் வழிவந்த சைவ சமயத்தை வைதிக நெறி எனல் பொருந்துவதே. வைதிக நெறியிலே சாக்தம், வைணவம் முதலிய பிற சமயங்களும் அடங்கும். சாக்தம்  சக்தியை முழுமுதற்கடவுளாகவும், வைணவம் விட்டுணுவை முழுமுதற்கடவுளாகவும் ஏற்றுள்ளன.

இருக்கு வேதம் பாட்டுக்களாலானது. இருக்கு என்ற சொல்லின் பொருள் பாட்டு என்பதாகும். இந்தப் பாட்டுக்கள் இந்திரன், வருணன், அக்கினி, உருத்திரன் முதலான தெய்வங்களைப் போற்றி வழிபட்டு மக்கள் நன்மைகளைப் பெறுவதற்கு உதவுவன. இவ்வாறு பல தெய்வங்கள் இருக்கு வேதத்திலே போற்றப்பட்டாலும், பரம் பொருள் ஒன்றே என்பதுதான், இருக்கு வேதத்தின் முடிந்த முடிபு. 'உண்மைப் பொருள் ஒன்றே. அறிவாளர் அதனைப் பல பெயர்களால் வழங்குவர்' என்று இருக்குவேதம் கூறும். அந்த உண்மைப் பொருளைச், சைவரான நாம் சிவம் என்று போற்றுகின்றோம். சிவம் மங்கலமானது, ஆனந்தமயமானது, பேரறிவும் பெராற்றலும் பேரருளும்  வாய்ந்தது.

வேதவழிபாடு யாகத்தை அடிப்படையாகக் கொண்டது. யாக முறைகளை விரித்துரைக்கும் வேதம் யசுர் வேதம். யசுர் என்ற சொல் 'யஜ்' என்ற பதத்தின் அடியாகப் பிறந்தது. 'யஜ்' என்பதன் பொருள் வேள்வி என்பதாகும். இது முற்றும் உரைநடையால் அமைந்தது.

சாமம் என்ற சொல்லின் பொருள் இசை என்பது. இசைப்பாடல்களால் அமைந்ததே சாமவேதம்.இவ்வேதத்தைக் கற்பதற்கு இசை அறிவு அவசியமாகும். வேள்விகளின்போது சாமவேதகானம் இசைக்கப்பட்டது.

அதர்வவேதம் ஒரு காலத்தில் வேத வரிசையிலே சேர்க்கப்படவில்லை. 'அதர்வ' என்ற சொல்லின் பொருள் தெளிவாயில்லை. அதர்வர், அங்கிரசர் என்ற இருவகைப் புரோகிதர்களுக்கு உரியது என்ற பொருளிலே 'அதற்வாங்கிரஸ்' எனும் பெயரில் இவ்வேதம் வழங்கப்பட்டது என்பர். இது உலகியல் சார்ந்த வாழ்விற்கே பெரிதும் உதவவல்லது; பாட்டாலும் உரைநடையாலும் ஆக்கப்பட்டது.

வேதங்கள் தனித்தனி நான்கு பிரிவுகள் கொண்டவை. அவை சங்கிதைகள், பிராமணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள் என்பன வாகும். இவற்றுள் முதல் இரண்டையும் கன்மகாண்டம் எனவும் பின்னைய இரண்டையும் ஞானகாண்டம் எனவும் வழங்குவது மரபு. சங்கிதைகள் பாடற்றொகுப்புக்கள். பிராமணங்கள் வேள்விக்கான விதிமுறைகள். ஆரணியகங்கள் வனங்களிலே ஞானிகள் அருளிச்செய்தவை. யாகங்களின் உண்மைப் பொருளையும் அவை குறிப்பனவற்றையும் ஆரணியகங்கள் விளக்குகின்றன. உபநிடதங்களே வேதங்களின் எல்லை. ஆழமான தத்துவங்களை  இவை  புலப்படுத்தும். இவற்றை வேதாந்தங்கள் எனவும் அழைப்பர்.

 

(ஆ) ஆகமாந்தம்

 நாம் கைக்கொள்ளும் சைவசமயமானது வேதங்களோடு ஆகமங்களையும் முதனூல்களாய் ஏற்றுள்ளது. வேதங்கள் யாகக் கிரியைகளை வழிபாட்டு முறைமையாகக் கொள்கின்றன. ஆகமங்களோ ஆலய வழிபாட்டிற்கு முதன்மை அளிக்கின்றன. சைவHகளான நாம் ஆலய வழிபாட்டிலேயே பெரிதும் ஈடுபட்டு வருவதால் ஆகமங்கள் எமக்குச் சிறப்பு நுhல்களாகும்.  ”ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான்தாள் வாழ்க” என்பது மாணிக்கவாசக சுகாமிகளின் திருவாக்கு. ஆகமங்கள் முதன்மை பெறுவதாற் சைவ நெறியினை ஆகமாந்தம் என வழங்குவதும் மரபு.

 ஆகமம் என்ற சொல் இறைவனிடமிருந்து வருவது எனவும் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களின் உண்மையை விளக்குவது எனவும் அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை அருள்வது  எனவும் பலவாறு பொருள் உரைக்கப்படும். சைவாகமங்கள் இருபத்தெட்டு. அவையாவன காமிகம், யோகசம, சிந்தியம் காரணம், அசி;தம,  தீப்தம, சூக்குமம, சகச்சிரமஇ; அஞ்சுமான், சுப்பிரபோதம், விஜயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம் ரௌரவம, மகுடம், விமலம், சந்திரஞானம் முகவிம்பம, புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம, பாரமேசுரம, கிரணம், வாதுளம்.

 ஆகமங்களின் வாயிலாகக் கோயில்களின் அமைப்பு, விக்கிரகங்களின் அமைப்பு, அவற்றை ஆலயங்களிலே எழுந்தருளச் செய்தல்(பிரதிஷ்டை), பூசைக்கிரமம், அபிடேகம், ஆகியவற்றையும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்புகளையும் மூவகை  வழிபாட்டு முறைமைகளையும் நால்வகைப் பாதங்களையும் இன்னேரன்ன பல வேறு விடயங்களையும் விரிவாக அறியலாம்.

 இவை மட்டுமன்றிப் பதினெண்புராணங்கள,  இராமாயணம், பாரதம் ஆகிய இதிகாசங்களும் சமய அறிவிற்கும் விளக்கத்திற்கும் உதவுகின்றன.


சைவ சித்தாந்தம்


 வேதங்களையும் ஆகமங்களையும் முறையே பொது, சிறப்பு என வகுத்து ஏற்றுக் கொண்ட சைவ சமயம் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தமிழிலே உள்ள தோத்திரங்களையும் சாத்திரங்களையும் மிகுதியும் போற்றி அவற்றையும் தனக்குப் பிரமாணநூல்களாகக் கொள்கின்றது. இவ்வாறு கொள்ளும் நெறி சைவசித்தாந்த நெறி எனப் பெயர் பெறும். சைவசமயம் பற்றிய அறிவின் முடிந்த முடிவு  என்பது  சைவசித்தாந்தம் என்ற சொற்றெடரின் பொருளாகும்.

 இறைவனைப் பல நிலைகளிலே வழிபட்டு அவன் பெருமைகளைத் திருப்பாடல்களாக அடியார் பெருமக்கள் எமக்கு அருளியுள்ளன. இவை தோத்திரப்பாக்கள். சிவபெருமானின் அருளைத்துணைக்கொண்டு பாடியருளப்பட்டவையாதலின் இவற்றைத் ”திருவருட்பாக்கள்” எனச் சான்றேர் வழங்குவர். இவை பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவையே தோத்திரங்களாகும்.

 ஆகமக் கருத்துக்களையும் திருமுறைகளிற், பொதிந்துள்ள உண்மைகளையும் தொகுத்துப் பதிபசுபாச இயல்புகளையும் நுட்பங்களையும் எடுத்துக் காட்டித் தமிழில் யாத்தருளிய நூல்கள் சாத்திரங்களாகும். இவை தொகையாற் பதினான்கு. இவற்றைச் சித்தாந்த சாத்திரங்கள் என்றும் மெய்கண்ட சாத்திரங்களென்றும் அழைப்பர். 
 
இவற்றிற்கு விளக்க உரைகள்இ வியாக்கியானங்கள் மெய்நெறியுணர்ந்த சான்றேர்களால் எழுதப்பட்டுள்ளன. தோத்திரவரிசையில் அருணகிரிநாதர், தாயுமானவர், குமரகுருபரசுவாமிகள் போன்றாரின் திருப்பாடல்களும் இடம் பெறுகின்றன.
 
இவ்வாறு பரந்த நூற்பரப்பும், செழுமையும், பக்தியுணர்வும், ஞானநோக்கும் ஒன்றிணைந்து வரலாற்றிற்கு முற்பட்ட காலந்தொடக்கம் சைவ மக்களை வழிபடத்தி வரும் பெருநெறியே வைதிகநெறியாகும்.


வினாக்கள்

1. சைவசமயத்தின் முதனூல்கள் எவை ?
2. சைவசமயத்தை வைதிக நெறி என்பதேன் ?
3. வைதிக சமயங்கள் எனக் குறிக்கப்படும் வேறு இரு சமயங்களின் பெயர் தருக.  அவை எவ்வெக் கடவுள்களைப் பரம் பொருளாகப் போற்றப்படுகின்றன ? 
4. வேதவழிபாடு எதனை அடிப்படையாகக் கொண்டது ?
5. வேதம் ஒவ்வொன்றம் எத்தனை பிரிவுகள் கொண்டது ?
அப்பிரிவுகளைக் கூறுக ?
6. உபநிடதங்களை வேதாந்தங்கள் என அழைப்பதேன் ?
7. சைவ சமயத்தை ஆகமாந்தம் என்பது ஏன் ?
8. ஆகமம் என்ற சொல்லின் பொருள் யாது ?
9. திருவருட்பாக்களை வேறு எப்பெயர்களால் அழைப்பர் ?
10. சைவம் - வைதிகநெறி என்ற தலையங்கத்திற் சிறிய கட்டுரை எழுதுக.
  

மூலம் : "இந்து சமய பாடம்" கல்விப் பொதுத் தராதரப் பத்திர ( சாதாரண ) தரம் - வித்துவான்     க. சொக்கலிங்கம் M. A .