முகவுரை

வேதங்களும் உபநிடதங்களும் வடமொழிச் சொற்றெடர் அமைப்பில்; ”வேதோபநிடதம”; எனப்படும். வேதங்கள் பற்றி வைதிக நெறி என்ற முன்னைய பாடப் பிரிவிலே சுருக்கமாகக் கூறப்பட்டது. வேதங்களை எழுதாக்கிளவி, சுருதி, நிகமம், மறை, அபௌருடேயம் என்னும் பல பெயர்களால் வழங்குவர். வேதங்கள் ஆதியிலே எழுத்தில் வடிக்கப்படவில்லை. செவிவழியாகக் கேட்கப்பட்டே வந்தன. சுருதி என்ற சொல்லின் பொருள் கேட்பதற்கு உரியது என்பது. நிகமம் என்ற சொல் என்றும் அறிவதற்கு உரியதாய் உள்ளது எனப் பொருள்படும். மறை என்பது இரகசியமான உட்பொருள் பல அமைந்தது என்று பொருள்படும். மனிதனால் ஆக்கப்படாதது எனக் குறிப்பதற்கு வேதங்களை அபௌருடேயம் என்ற பெயரால் வழங்கினர்.

வேதத்தின் இறுதியாகவும் சாரமாகவும் முடிந்த முடிவாகவும் விளங்குபவை உபநிடதங்களாகும். இதனால் இவற்றிற்கு வேதாந்தங்கள் எனவும் பெயர் கூறப்படும். வேதங்கள் யாவற்றிற்கும் மறை என்ற பெயர் பொதுவாக வழங்கினாலும் அது உபநிடதங்களுக்கே பெரிதும் பொருந்துவதாகும். ஏனெனில், அவை இரகசியமான பல தத்துவங்களை உள்ளடக்கியுள்ளன.

Template by JoomlaShine