மாதங்களில் சிறந்தது மார்கழி மாதமாகும். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ண பகவான் கீதோபதேசத்தில் கூறுவதிலிருந்து இதன் மகிமையை அறியலாம். மேலும் மார்கழி தேவர்களுக்கு விடியற்காலம். எனவே இறைவனை நினைத்து திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை ஆகியன பாடுவதற்கு மார்கழி உகந்த மாதமாகும்.

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்திய ஒன்பது தினங்களும் திருவெம்பாவை உற்சவ காலங்களாகும். திருவாதிரை  நட்சத்திர தினத்தன்று  திருவெம்பாவை நிறைவு பெறுகின்றது. திருவெம்பாவை நடராஜப் பெருமானுக்கு உரித்தான உற்சவம்.

மேலும் மார்கழியில் நிகழும் விழா இறைவனின் ஐந்தொழில்களில் அனுக்கிரகத்தைக் குறிப்பதாகையால் இவ்விழா எல்லா விழாக்களிலும் சிறப்புடையதாகும். மார்கழி திருவாதிரையில் நடைபெறும் நடேசர் அபிடேகமும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்திரா தரிசனமும் ஆன்ம ஈடேற்றத்துக்கு இன்றியமையாதனவாகும்.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.