ஜப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாளாகிய சதுர்த்தசி பொருந்திய விடியற்புற நேரம் தீபாவளிக் காலமாகும். வீடுவாசல் அக்கம் பக்கம் எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுவதால் இந்நாளுக்குத் தீபாவளி என்று பெயர் வந்ததாகச் சைவப் பெரியார்  சிவபாத சுந்தரனார் கூறுகிறார். அன்றைய தினம் காலையில் ஸ்நானம் செய்து கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து புண்ணியச்செயல்கள் செய்யவேண்டும். உபவாச விரதம் அனுட்டித்தல் உத்தமம். இந்த நாள் ஆன்மாக்கள் நரக வழியினின்றும் நீக்கப்படும் நற்பாக்கிய நிலையைக் குறிப்பதாகும். எனவே பாதகத் தொழில்களின்றும்  விலகியிருத்தல் சகலரதும் கடனாகும்.

  

 இஃது அனைவரும் புனிதமானவராய் இறைவனைப் பிரார்த்திக்கும் திருநாளாகும். இந்நாளில் நரகாசுரன் என்ற அசுரன் பல கொடுமைகளையும் பஞ்சமா பாவங்களையும் செய்து வந்தான். இவனுடைய கொடுமை தாங்காத தேவர்கள் விஷ்ணு பகவானிடம் சரணடைந்து, தம்மைக் காக்க வேண்டி நிற்க, அதற்ட்கிணங்கி எம்பிரான் அவனைச் சம்ஹாரம் செய்ய, இறக்கும் தருணத்தில் தன் தவறை உணர்ந்த அசுரன் தான் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் விமோசனம் கிடைக்கும் பொருட்டுத் தான் இறக்கும் இந்நாளில் "இறைவா நான் எனக்காக எதுவும் கேட்கவில்லை. நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இன்றைய நாளில் யார் ஆசரமுள்ளவராய், பஞ்சமா பாவங்களையும் விடுத்து உன்னைத் தியானித்து பூஜிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரகம் விடுத்துச் சொர்க்கம் கிடைக்க அருள வேண்டும்" எனப் பிரார்த்திக்க, இறைவனும், அவனுக்கு அருள் வழங்கி, மோட்சம் கொடுத்தார். இந்நாளில் உபவாசமிருந்து விஷ்ணு நாமங்கள் ஜெபித்து, விஷ்ணு தரிசனம் செய் வோருக்கு, வைகுண்ட மோட்சம் கிடைக்கும் என்று புராணங்களில் சொலப்பட்டுள்ளது. இதைப் புரியாத நம்மவர் , தீபாவளி நாளில் உயிர்ப்பலி செய்து, புசித்து, மது அருந்தி, பல பாவங்களையும் மேற்கொள்வது அறியாமையாகும். இனிவரும் நாட்களிலாவது, எம்மவர்கள் இப்படியான பாவச் செயலை விடுத்து நற்செயலும் நற்கதியும் பெறுவார்களாக. 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.