ஜப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதற் சட்டி ஈறாகிய ஆறு நாளும் அனுட்டிக்கும் விரதம் இதுவாகும். ஒவ்வொரு நாளும் காலையில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டு, சிறிதளவு நீர்மட்டும் அருந்தி உபவாசம் ஆறு நாளும் இருந்து, ஏழாம்நாள் சிவனடியார்களுடன் பாரணை செய்வது இவ்விரதத்திற்கு நியமமாகும். இதற்கு இயலாதவர் முதலைந்து நாளும் ஒரு பொழுது உண்டு. சட்டியில் உபவாசஞ் செய்யக் கடவர். இவ்விரதம் ஆறு ஆண்டுகள் அனுட்டித்தல் வேண்டும்.

பிரதமையில் சிவபெருமானது நெற்றியிலிருந்து தெறித்த பொறிகள் ஆறும் சரவணப்பொய்கையில் ஆறுருவாக, அதனை உமாதேவியார் எடுக்க ஆறுதிருமுகமும்,  பன்னிரண்டு திருக்கையமுடைய ஓருருவாய் எழுந்தருளிய நாள் இக்கந்த சட்டி நாளாகும். சூரபதுமனை முருகன் சங்காரஞ் செய்த நாளும் இதுவேயம். கந்தபுராண உபதேச காண்டத்தில் இவ்விரதம் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தேவர்கள் இவ்விரதத்தை நோற்றுப் பயன் பெற்றதாகவும் இந்நூல் கூறும்.

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொணாமல்
நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி 
அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தில் 
வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளி னானே.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.