மாதந்தோறும் வரும் வளர்பிறைச் சதுர்த்தித் திதி விநாயகர் விரதத்திற்குச் சிறந்த நாளாகும். அந்நாளில் இளம்பிறைச் சந்திரனைப் பார்த்தலாகாது. பகலில் உபவாசம் இருந்து ஆலய தரிசனம் செய்த பின், இரவில் கொழுக் கட்டை, மோதகம் முதலியன விநாயகருக்கு நிவேதித்து உண்ணலாம். அந்நோன்பு நோற்பவர் விநாயகரை அறுகம் புல்லால் அர்ச்சிப்பது அளவிறந்த பலனைக் கொடுக்கும். இத்தினத்தில் விரதம் அனுட்டித்து உள்ளன்போடு வழிபடுவோர்க்கு விநாயகர் திருவருள் கடாட்சம்  கிடைக்கும் என்பது உறுதி.

சங்கடகரசதுர்த்தி.

தேய்பிறையில் வரும் சதுர்த்தியைச் சங்கடகரசதுர்த்தி என அழைத்து விரதமிருப்பர்.


ஆவணிச் சதுர்த்தி (ஆவணி மாதம் வளர்பிறை 4ம் நாள்)

ஆவணி மாதத்துப் பூர்வ பக்கச் சதுர்த்தி, விநாயகப்பெருமான் திருவவதாரம் செய்த தினமாகையால் விநாயக விரதத்திற்கும், வழிபாட்டிற்கும் சிறந்த நாளாகும். ஆவணி மாத  வளர்பிறைச் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதம், மற்றும் விரத பலனிலும் பார்க்கக் கூடுதலான பலனை நல்கும் எனச்சமய நூல்கள் சாற்றுகின்றன.

ஸ்ரீ நடராசப் பெருமானின் ஆறு அபிடேகங்களில், இத்தினத்தில் நடை பெறும் அபிடேகமும் ஒன்றாகையால், இத்தினம் நடேசர் தரிசனத்திற்கும் சிறந்ததாகும்.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.