மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நன்நாளில் அனுட்டிப்பது திருவாதிரை விரதம். இந்த விரதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. இதனையொட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் கூறுவர்.

மார்கழித் திங்கள் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புக்கள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகுந்த சிறப்புடையது. இவ்விரதம் சிதம்பரத்தில்லிருந்து அனுட்டிப்பது உத்தமோத்தமம். அங்கு ஆருத்திரா தரிசனம் செய்வதற்காக அநேகர் செல்வர். ஆருத்திரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இவ் விரதத்தில் உபவாசம் இருத்தல் மேலாம்.

சங்கரசங்கிதை என்னும் வடமொழி நூலின் உபதேச காண்டத்தில் இவ்விரதமகிமை கூறப்பட்டுள்ளது. கச்சியப்பசிவாசாரியருடைய மாணாக்கராகிய கோனேரியப்ப முதலியார் தமிழில் இதனை மொழி பெயர்த்துள்ளார்.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.