திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(முதல் திருமுறை)

1. தோடுடைய செவியன் விடையேறியோர்

தூவெண் மதிசூடிக்

காடுடைய சுடலைப்பொடி பூசியென்

னுள்ளங்கவர் கள்வன்

ஏடுடைய மலரான்முனை நாட்பணிந்

தேத்தவருள்செய்த

பீடுடைய பிரமாபுர மேவிய

பெம்மானிவனன்றே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(முதல் திருமுறை)

2. அங்கமும் வேதமும் ஓதுநாவர்

அந்தணர் நாளும் அடிபரவ

மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல்

நிலாவிய மைந்தசொல்லாய்

செங்கய லார்புனற் செல்வமல்கு

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(முதல் திருமுறை)

3. சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்

முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்

துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்

பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(முதல் திருமுறை)

4. உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்

பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை)

5. ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்

ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்

ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்

ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(இரண்டாம்திருமுறை)

6. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர்வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(இரண்டாம்திருமுறை)

7. வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி

சனி பாம்பிரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(இரண்டாம்திருமுறை)

8. இடரினும் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை)

9. விருது குன்றமா மேருவில் நாணர வாஅனல் எரிஅம்பாப்

பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளும்

கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம்

கருத நின்ற கேதீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை)

10. தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்

இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்

வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்

கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை)

11. சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்

மதுரம் பொழில்சூழ் மறைக் காட்டுறை மைந்தா

இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்

கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை)

12. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்

கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(இரண்டாம்திருமுறை)

13. பண்ணி னேர்மொழி யாளையோர் பாகனார்

மண்ணு கோலம்முடை யம்மல ரானொடும்

கண்ண னேடவரி யார்கரு காவூரெம்

அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.

திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை)

14. துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்

றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை)

15. காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம் நமச்சி வாயவே.

திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை)

16. தாயினும் நல்ல தலைவரென் றடியார்

தம்மடி போற்றிசைப் பார்கள்

வாயினும் மனத்தும் மருவிநின் றகலா

மாண்பினர் காண்பல வேடர்

நோயிலும் பிணியுந் தொழலர்பால் நீக்கி

நுழைதரு நூலினர் ஞாலங்

கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த

கோணமாமலை யமர்ந்தாரே.

திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை)

17. நிரைகழல் அரவம் சிலம்பொலி அலம்பும்

நிமலர் நீறணி திருமேனி

வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த

வடிவினர கொடியணி விடையர்

கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்

அளப்பரும் கனமணி வரன்றி

குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும்

கோணமாமலை அமர்ந்தாரே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(நான்காம் திருமுறை)

18. தலையே நீவணங்காய் - தலை

மாலை தலைக்கணிந்து

தலையாலே பலி தேருந் தலைவனைத்

தலையே நீவணங்காய்.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(நான்காம் திருமுறை)

19. கூற்றாயின வாறு விலக்ககிலீர்

கொடுமைபல செய்தன நான் அறியேன்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(நான்காம் திருமுறை)

20. மாதர்ப் பிறைக்கண்ணி யானை

மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப்

புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல்

ஐயா றடைகின்ற போது

காதன் மடப்பிடி யோடுங்

களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்

கண்டறி யாதன கண்டேன்.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(நான்காம் திருமுறை)

21. சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(நான்காம் திருமுறை)

22. இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(நான்காம் திருமுறை)

23. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்

கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது

நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(நான்காம் திருமுறை)

24. சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்

உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்

உலந்தார் தலையிற் பலி கொண்டுழல்வாய்

உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்

அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஐந்தாம்திருமுறை)

25. மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஐந்தாம் திருமுறை)

26. நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்

தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்

என்க டன்பணி செய்து கிடப்பதே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஆறாம் திருமுறை)

27. சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து

தரணியொடு வானாளத் தருவ ரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்

மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்

அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்

ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்

அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவு ளாரே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஆறாம் திருமுறை)

28. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்

குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில்

பால் வெண்ணீறும்

இனித்த முடைய எடுத்த பொற் பாதமும்

காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே

இந்த மாநிலத்தே!

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஆறாம் திருமுறை)

29. ஓசை ஒலியெலா மானாய் நீயே

உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே

வாச மலரெலா மானாய் நீயே

மலையான் மருகனாய் நின்றாய் நீயே

பேசப் பெரிது மினியாய் நீயே

பிரானாய் அடியென் மேல் வைத்தாய் நீயே

தேச விளக்கெலா மானாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஆறாம் திருமுறை)

30. எல்லா உலகமு மானாய் நீயே

ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே

நல்லாரை நன்மை யறிவாய் நீயே

ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே

பொல்லா வினைக ளறுப்பாய் நீயே

புகழ்ச் சேவடியென் மேல் வைத்தாய் நீயே

செல்வாய செல்வந் தருவாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஆறாம் திருமுறை)

31. திருவேயென் செல்வமே தேனே வானோர்

செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சோதி மிக்க

உருவே என்னுறவே என் ஊனே ஊனின்

உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற

கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்

கருமணியே மணியாடு பாவாய் காவாய்

அருவாய வல்வினை நோய் அடையா வண்ணம்

ஆவடுதண்டுறை யுறையும் அமர ரேறே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஆறாம் திருமுறை)

32. மாப்பிணைத் தழுவிய மாதோர் பாகத்தன்

பூப்பிணைத் திருந்தடி பொருந்த கைத்தொழ

நாப்பிணைத் தழுவிய நமச்சி வாய பத்தும்

ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

33. ஆலந் தானுகந் தமுதுசெய் தானை

ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்

சீலந் தான்பெரி தும்முடை யானைச்

சிந்திப் பாரவர் சிந்தையு ளானை

ஏல வார்குழ லாள்உமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

கால காலனைக் கம்பன் எம்மானைக்

காணக் கண் அடியேன்பெற்ற வாறே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

34. பொன்னார் மேனியனே புலித்தோலை

அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை

அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனியாரை

நினைக்கேனே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

35. கோல மால்வரை மத்தென நாட்டிக்

கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த

ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய

அமரர் கட்கருள் புரிவது கருதி

நீல மார்கடல் விடந்தனை யுண்டு

கண்டத் தேவைத்த பித்தநீ செய்த

சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

36. தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

37. மூவரென இருவரென

முக்கண்ணுடை மூர்த்தி

மாவின்கனி தூங்கும்பொழில்

மாதோட்டநன் னகரில்

பாவம்வினை யறுப்பார்பயில்

பாலாவியின் கரைமேல்

தேவன்எனை ஆள்வான்திருக்

கேதீச்சரத் தானே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

38. நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய்

மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்

பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்

செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

39. தம்மையே புகழ்ந்திச்சை பேசினுஞ்

சார்வினுந்தொண்டர் தருகிலாப்

பொய்ம்மையாளரைப் பாடாதே யெந்தை

புகலூர்பாடுமின் புலவீர்காள்

இம்மையே தருஞ் சோறுங்கூறையும்

ஏத்தலாமிடர் கெடலுமாம்

அம்மையே சிவலோக மாள்வதற்

கியாதுமையுற வில்லையே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

40. நீள நினைந்தடியேன் உமை

நித்தலும் கைதொழுவேன்

வாளன கண்மடவாள் அவள்

வாடி வருந்தாமே

கோளிலி எம்பெருமான் குண்டை

யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை எம்பெருமான் அவை

அட்டித் தரப்பணியே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

41. ஏழிசையாய் இசைப்பயனாய்

இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான்செய்யும்

துரிசுகளுக் குடனாகி

மாழையொண்கண் பரவையைத்தந்

தாண்டானை மதியில்லா

ஏழையேன் பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

42. செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரம்

தீயெ ழச்சிலை கோலினாய்

வம்பு லாங்குழ லாளைப் பாகம்

அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்

கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்

ஆடு பாண்டிக் கொடுமுடி

நம்ப னேஉனை நான்ம றக்கினும்

சொல்லும் நா நமச்சிவாயவே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

43. அழுக்கு மெய்க்கொடுஉன் திருவடி அடைந்தேன்

அதுவும் நான்படப் பாலதொன் றானால்

பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்

பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்

வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்

மற்று நான்அறி யேன்மறு மாற்றம்

ஒழுக்க என்கணுக்கு ஒருமருந்து உரையாய்

ஒற்றி யூரெனும் ஊர்உறை வானே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

44. பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்

போக மும்திரு வும்புணர்ப் பானைப்

பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்

பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை

இன்ன தன்மையன் என்றறி வொண்ணா

எம்மா னைஎளி வந்தபி ரானை

அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி

ஆரூ ரானை மறக்கலு மாமே .

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

45. வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்

தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்

கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே.

நாவின்மிசை அரையன்னொடு தமிழ் ஞானசம்பந்தன்

யாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன்

தேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த

பாவின் தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

46. சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளுங்

கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன்

படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்

திடமாஉறை கின்றான்றிருக் கேதீச்சரத் தானே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

47. மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்

பிறரை வேண்டாதே

மூளாத் தீப்போல் உள்ளே கனன்று

முகத்தால் மிகவாடி

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்

அல்லல் சொன்னக்கால்

வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்

வாழ்ந்து போதீரே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை)

48. பித்தாபிறை சூடீபெரு

மானே அருளாளா

எத்தான்மற வாதேநினைக்

கின்றேன்மனத் துன்னை

வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்

நல்லூர் அருட்டுறையுள்

அத்தாஉனக் காளாயினி

அல்லேன்எனல் ஆமே.