மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம்

(எட்டாம் திருமுறை)

1. பூசுவதும் வெண்ணீறு

பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால்

மறைபோலுங் காணேடீ

பூசுவதும் பேசுவதும்

பூண்பதுவுங் கொண்டென்னை

ஈசனவன் எவ்வுயிர்க்கும்

இயல்பானான் சாழலோ.

 

2. முத்திநெறி அறியாத

மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப்

பழவினைகள் பாறும்வண்ணம்

சித்தமலம் அறுவித்துச்

சிவமாக்கி எனைஆண்ட

அத்தனெனக் கருளியவா

றார்பெறுவார் அச்சோவே.

 

3. அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற

ஆதியே யாதும்ஈ றில்லாச்

சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த

செல்வமே சிவபெரு மானே

பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்

பிழைத்தவை அல்லையாய் நிற்கும்

எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.

 

4. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்தஆ ரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.

 

5. பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே

பற்றுநான் மற்றிலேன் கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே

திருப்பெருந் துறையுறை சிவனே

யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்

ஆண்டநீ அருளிலை யானால்

வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்

வருகஎன் றருள்புரி யாயே.

 

6. பால் நினைந்தூட்டும் தாயினும்

சாலப்பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த

செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவதினியே !

 

7. பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்

பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்

விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்

கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை

மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.

 

8. போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்

டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

 

9. மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து

உன் விரை ஆர் சுழற்கு என்

கைதான் தலை வைத்துக்

கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்

பொய்தான் தவிர்ந்து உன்னைப்

போற்றி சய சய போற்றி என்னும்

கைதான் நெகிழ விடேன் உடையாய்

என்னைக் கண்டு கொள்ளே.

 

10. நானேயோ தவம்செய்தேன்

சிவாயநம எனப்பெற்றேன்

தேனாய்இன் அமுதமாய்த்

தித்திக்கும் சிவபெருமான்

தானேவந் தெனதுள்ளம்

புகுந்தடியேற் கருள்செய்தான்

ஊனாரும் உயிர்வாழ்க்கை

ஒறுத்தன்றே வெறுத்திடவே.

 

11. உடையாள் உன்றன் நடுவிருக்கும்

உடையாள் நடுவுள் நீயிருத்தி

அடியேன் நடுவுள் இருவீரும்

இருப்ப தானால் அடியேன்உன்

அடியார் நடுவு ளிருக்கும்அரு

ளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்

முடியா முதலே என்கருத்து

முடியும் வண்ணம் முன்னின்றே.

 

12. வழங்குகின் றாய்க்குன் அருளா ரமுதத்தை

வாரிக்கொண்டு

விழுங்குகின்றேன் விக்கி னேன்வினை யேன்என்

விதியின்மையால்

தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந்

துய்யக்கொள்ளாய்

அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன்

அடைக்கலமே.

 

13. இன்று எனக்கு அருளி இருள் கடிந்து

உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று

நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்

நீயலாற் பிறிது மற்றின்மை

சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து

ஒன்றாம் திருப்பெருந்துறை உறை சிவனே!

ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்றில்லை

யார் உன்னை அறியகிற்பாரே?

 

14. கடையவனேனக் கருணையினாற்

கலந்தாண்டு கொண்டவிடையவனே

விட்டிடுதிகண்டாய் விறல் வேங்கையின் தோல்

உடையவனே மன்னும் உத்தரகோச

மங்கைக்கரசே சடையவனே தளர்ந்தேன்

எம் பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே.

 

15. உற்றாரை யான் வேண்டேன்

ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்

கற்றாரை யான் வேண்டேன்

கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்துறையும்

கூத்தா உன் குரைகழற்கே

கற்றாவின் மனம் போலக்

கசிந்துருக வேண்டுவனே.

 

16. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

 

17. தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை;

சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்;

யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்!

திருப்பெருந்துறை உறை சிவனே!

எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்;

யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!