1. வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

 

2. உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

3. இறவாத இன்ப அன்பு
வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போதுன்
அடியின் கீழ் இருக்க என்றார்.

4. ஆதியாய் நடுவு மாகி
அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
பொதுநடம் போற்றி போற்றி.

5. கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.

6. பாடினார் பணிவுற்றார்
பரிவுறுஆ னந்தக்கூத்
தாடினார் அகங்குழைந்தார்
அஞ்சலிதஞ் சென்னியின்மேல்
சூடினார் மெய்ம்முகிழ்த்தார்
சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவர்க்கும்
தெரிவரியார் திருமகனார்.

7. மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர் குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளி னாலே
இருந்ததமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழல்எம்மால் போற்ற லாமே.

8. ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள


அளப்பரும் கரண்கள் நான்கும்

சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும்

திருத்து சாத்துவிகமே ஆக

இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த

எல்லையில் தனிப்பெரும் கூத்தின்

வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து

மாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.